ஊடகவியலாளர்களின் சுதந்திரமான பணிகளை கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு இலங்கை அரசாங்கம் அண்மையில் அறிவித்த பாதுகாப்பு சட்டம் தொடர்பான செய்திகள் மீதான கட்டுப்பாடு குறித்து சர்வதேச ஊடகவியலாளர் ஒன்றியம் விளக்கம் கோரியுள்ளது.
சர்வதேச ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஆசிய பசுவிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் ஜக்குவின் பார்க் இது பற்றி கருத்து தெரிவிக்கையில் ஊடகவியலாளர்கள் மீதான இச் சீர்திருத்தம் நடைமுறைக்கு வருமாயின். அது இலங்கை மோசமான வன்முறை நிலவும் ஒரு நாடு என்ற சர்வதேச சமூகத்தின் அபிப்பிராயத்திற்கு ஆளாக வேண்டிவரும் எனத் தெரிவித்தார்.
தற்போது கொண்டுவரப்படவுள்ள புதிய திருத்தச் சட்டம் நாட்டின் தேசிய பாதுகாப்பை குறியாகக் கொண்டிருக்கவில்லை. மாறாகஇ ஊடகவியலாளரின் சுதந்திரமான பணியை மட்டுப்படுத்தவும் சுதந்திரமாக அரசாங்கத்தின் ஊழல் முறைகேடுகளை அறிந்து வெளியிடுகின்ற செயற்பாடுகள் மீதே இந்த தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் இவ்வாறான கட்டுப்பாடு அமுலுக்கு வருமாயின் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை நேரடியாக சென்று, நிலைமைகள் பற்றிய தகவல்களை பெறும் பத்திரிகையாளரின் தொழிற்பாடு, முற்றாகத் தடைக்குள்ளாகும்.
நேரடியாகச் சென்று களநிலைமைகளை மதிப்பீடு செய்யும் பணியை தொழிலாகக் கொண்டுள்ள பத்திரிகையாளர்கள், தமது பணிகளை சுதந்திரமாக சென்று, தெளிவான விடயங்களை நேரடிக் கவனத்திற்குட்படுத்தும் நடைமுறையைக் கொண்டுள்ளனர்.
அண்மையில் சர்வதேச சமூகத்தினால் கவனத்திற்கொள்ளப்பட்ட இலங்கை அரசின் உக்ரேன் அரசுடனான ஆயுதக்கொள்வனவு குறித்த சண்டே ரைம்ஸ் ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸின் அறிக்கை இலங்கை அரசாங்கத்தை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியிருப்பதுடன் அதன் இருப்பையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஊடகத்துறையினரின் ஊடகசுதந்திரமும், அவர்களின் சுதந்திரமான செயற்பாடுகளும், இலங்கை அரசுக்கு வெளிப்படையாகவே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.