மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 60 ஆயிரம் ஏக்கர்
செய்கை பண்ணப்பட்ட நெற் காணி பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 50 வீதமான
விவசாயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் உதவி ஆணையாளர் ஆர்
றுசாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 150 ஆயிரம் முதல் 170 ஆயிரம் ஏக்கர்
நிலப்பரப்பில் பெரும் போகச் செய்கை பண்ணப்பட்டள்ளது. கடந்த ஒரு வார காலமாக
பெய்துவரும் அடைமழையினால் சுமார் 60 ஆயிரம் நெற்ச் செய்கை பண்ணப்பட்ட ஏக்கர்
காணி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேளாண்மை தற்போது கதிர் வெளிவரும் பருவத்தில் வெள்ள நீர் பாதிக்கப்படுவதில்
நெல் மணியற்ற நிலை (பதர்) நிலை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன்
நோய்த் தாக்கத்தின் அளவும் தற்போது அதிகரித்துள்ளமையினால் வேளாண்மை
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நீரினால் 28 சிறிய நீர்ப்பாசன குளங்கள்
உடைப்பெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
வழமையாக வேளாண்மைச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் காப்புறுதி செய்தும்
நஷ்ட்டம் ஏற்படும் போது இழப்பீடுகள் வழங்கப்படுவதில்லை. தற்போது
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணத்திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என
விவசாயச் செய்கையில் ஈடுபடும் விவசாயி ஒருவர் அரசாங்கத்திடம் வேண்டு
கோள்விடுத்துள்ளார்.
இதேவேளை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் 72,703
குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 76 ஆயிரம் பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பிரதேச செயலகப் பிரிவில் 631 குடும்பங்களைச்
சேர்ந்த 2365 இடம்பெயர்ந்து 11 நலன்புரி நிலையங்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்
தெரிவித்தார்.
மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 1722
குடும்பங்களைச் சேர்ந்த 6521 பேர் நண்பர்கள் உறவினர்களின் வீடுகளில்
தங்கியுள்ளதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.