அரசாங்கத்துடனான அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தொடரவேண்டுமானால் அரசாங்கத்தின் சிந்தனையில் மாற்றம் ஏற்படவேண்டும். அத்துடன் எழுத்து மூலமான தனது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தலைவர்
இரா.சம்பந்தன் தினக்கதிருக்கு தெரிவித்தார்.
‘தமிழ்த்தேசியக்கூட்டடமைப்பு தற்போது எடுத்திருக்கும் முடிவு அவசரப்பட்டு எடுக்கப்பட்டது ஒன்றல்ல. ஆற அமர ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு இது. எமது பொறுமையை, நாங்கள் வழங்கிய கால அவகாசத்தை அரசாங்கம் தனக்கு சாதகமாகவே பயன்படுத்தியே வந்துள்ளது. நாங்கள் எழுத்தில் வழங்கிய யோசனைகளுக்கு அரசாங்கம் சரியான பதிலை எழுத்தில் வழங்கவில்லை. அரசியல் தீர்வு காணுவதை இழுத்தடிப்பதே அரசாங்கத்தின் ஒரே நோக்கம் என்பது தெட்டத் தெளிவாக தெரிகின்றது.
இச்சூழ்நிலையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை தொடருவது அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. சர்வதேச சமூகமும் தற்போயை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கின்றது’ என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.
இதேவேளை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசாவிடம் தினக்கதிர் தொடர்பு கொண்டு கேட்ட போது பேச்சுவார்த்தை என்ற பெயரில் சிறிலங்கா அரசாங்கம் எம்மை ஏமாற்றிக்கொண்டு காலம் கடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.
எங்களை நம்பியிருக்கும் தமிழ் மக்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும், நாம் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினையை தீர்க்க விரும்புகிறோம். ஆனால் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அரசாங்கம் எம்மை ஏமாற்றுவதற்கு இடம் கொடுக்க முடியாது. எமது மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும், சர்வதேச நாடுகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் நடந்து இராஜதந்திர ரீதியில் இந்த விடயத்தை நாங்கள் கையாளுவோம் என்றும் மாவை சேனாதிராசா தினக்கதிருக்கு தெரிவித்தார்.